தலை தீபாவளிக்கு கணவருக்கு விடுமுறை கிடைக்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் பொறையாறு அருகே செம்பனார்கோவில் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பாபு-சங்கீதா (வயது 25). இத்தம்பதியினருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு பாபு வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனையடுத்து தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, தன் கணவரிடம் தொலைபேசி மூலம் தலை தீபாவளிக்கு ஊருக்கு வருமாறு கூறி இருக்கிறார். ஆனால் பாபு வேலை பார்க்கும் நிறுவனத்தில் விடுமுறை கொடுக்காததால் தலை தீபாவளி கொண்டாட வர முடியாது என சொல்லியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பாபுவின் மனைவி சங்கீதா நேற்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த செம்பனார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கீதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சங்கீதாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆவதால் உதவி ஆட்சியர் மகாராணி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.