ரஜினி அரசியலுக்கு வந்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்
2017 ஆம் வருடத்திலிருந்து அரசியலில் ரஜினி களமிறங்க இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை கட்சி தொடங்குவது பற்றியும் அரசியலில் இறங்க போவது பற்றியும் ரஜினி தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனால் உண்மையில் அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரஜினி அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து இருப்பதால் கட்சி தொடங்க முடியாது என்றும், டிசம்பரில் எந்த முடிவை அறிவித்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் ரஜினி எழுதியது போன்ற கடிதம் ஒன்று இணையதளத்தில் வைரலானது.
இதற்கு விளக்கம் அளித்த ரஜினி, “எனது உடல்நிலை பற்றி குறிப்பிட்டு இருந்தது உண்மைதான் ஆனால் அந்த கடிதம் எழுதியது இல்லை” என தெரிவித்தார். இந்நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “ரஜினி நல்ல முடிவை தான் எடுத்துள்ளார். அரசியலுக்கு ரஜினி வர வேண்டாம். ஜாதி மத அரசியலில் சிக்கி அவர் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் வளத்தோடும் நலத்தோடும் அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார் இதேபோன்று அரசியலுக்கு ரஜினி வராமல் இருப்பது தான் நல்லது என்று சீமானும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.