கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறுகையில், ”நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை”என கூறினார் .
மேலும் நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின் படியே செயல்படுவேன். அ.தி.மு.க.வை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் கீழ்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறேன் என்றார் .
இந்நிலையில் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில் ,”மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவான எம்.எல்.ஏ. நான். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள். அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க.விற்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்”என்றார்.
மேலும் ,ஜெயலலிதாவின் கனவு, 100 ஆண்டுகள் இந்த இயக்கம் தமிழகத்தை ஆளும் என்பதுதான் . அந்த நல்ல எண்ணத்தில் நானும் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.அவர்களும் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும் என்ற சிறந்த எண்ணத்தில் இணைந்து பேசியிருக்கிறோம்.இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன். அம்மா ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக்குதான் ஆதரவாக செயல்படுவேன் என்றும் கூறினார்.