தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயற்சி செய்த இளம்பெண் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் அயனாவரத்தில் உள்ள நம்மாழ்வார்பேட்டையில் வசிக்கும் தாட்சாயினி என்பவரின் மகள் யாமினி(25). இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு யாமினி, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு இரண்டாவது தளத்தில் உள்ள தங்களது வீட்டின் பால்கனியில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாமினி மட்டும் பால்கனியின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்து விட்டதால் அதனை பிடிக்க முயன்ற போது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். யாமினியின் மூத்த சகோதரிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதால், அடுத்து யாமினிக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவத்தன்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போதுதான் யாமினி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் யாமினி செல்போனை பிடிக்க முயன்ற போது தவறி விழுந்தாரா? அல்லது திருமணம் பற்றி பேசியாதல் கீழே குதித்தாரா? என்பது குறித்த சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.