வங்கி அதிகாரி ஒருவர் தனது உயிரை சாமிக்கு காணிக்கையாக கொடுக்க தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள பந்தன்காட்டில் வசிக்கும் செல்ல சுவாமியின் மகன் நவீன்(32). இவர் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காததால் விரக்தியுடன் இருந்துள்ளார். அச்சமயம் நவீன் தனக்கு ஒரு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக கொடுப்பதாக கடவுளிடம் வேண்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியாவில் நவீனுக்கு உதவி மேலாளராக வேலை கிடைத்து பணிபுரிந்து வந்துள்ளார். எனவே தற்போது தனக்கு வேலை கிடைத்ததால் நவீன் தனது நேர்த்திக்கடனை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து விமானத்தின் மூலமாக திருவனந்தபுரம் வந்து பின்னர் காலையில் நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாமிக்கு நேர்த்திக்கடனாக தன்னுயிரை கொடுப்பதாக எழுதிவைத்துவிட்டு, புத்தேரியிலுள்ள தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயிலாலல் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.