இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் 145 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் உள்ள பட்டேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் கோவாடியாவில் அமைந்துள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தார். அவருடைய சிலையின் பாதத்தில் தீர்த்தம் தெளித்து அவர் வழிபட்டார்.
தொடர்ந்து பட்டேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. அப்போது பட்டேல் சிலைக்கு ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். 182 மீட்டர் உயரம் கொண்ட பட்டேல் சிலை முன்பு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நர்மதா ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள சிலை வளாகம் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்ந்து வருகிறது. நாட்டின் முதல் துணை பிரதமர் பொறுப்பு வகித்த வல்லபாய் பட்டேல், நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் பல மாகாணங்களை இந்தியாவுடன் சேர்த்து பெருமைக்குரியவர்.