வேலை கிடைத்தால் பணம், தலைமுடியை இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம், ஆனால் நாகர்கோவிலில் ஒருவர் தனது உயிரையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் அருகே எரும்புகாடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான நவீன். படித்து முடித்ததும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு அண்மையில் மும்பையில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக அவருக்கு வேலை கிடைத்தது. மும்பை சென்று பணியில் சேர்ந்த நவீன் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் நாகர்கோவில் புத்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நவீன் உயிரிழந்து கிடந்தார்.
இறப்பதற்கு முன் நவீன் எழுதி வைத்த கடிதத்தில் இருந்த தற்கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேலை கிடைக்காமல் விரக்தியில் சுற்றித் திரிந்த நவீன் ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைத்தால் தன் உயிரையே காணிக்கையாக செலுத்துவதாக இறைவனிடம் வேண்டிக் கொண்டு உள்ளார். அதன்படி வேலை கிடைத்ததும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்திருக்கிறார் நவீன். இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.