ரேஷன் கார்ட் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 32 க்கு விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான பருவ இறுதியில் பெய்த பலத்த மழையால் வெங்காயம் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டு வெங்காய விளைச்சல் குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது.
இந்நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியில், திறந்த சந்தையில் இருந்து வெங்காயத்தை வாங்கவும், நியாயமான விலைக் கடைகளில் மானிய விலையில் விற்கவும் கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இருந்து 1045 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய கோவா அரசு திட்டமிட்டுள்ளது. கோவாவில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு கார்டுக்கு மாதத்திற்கு 3 கிலோ என்ற விலையில் ஒரு கிலோ ரூ .32 விற்பனை விகிதத்தில் விநியோகிக்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வெங்காய விலை உயர்விலிருந்து பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும் என அரசு குறிப்பிட்டுள்ளது.