சாதியவாத, மதவாத சக்திகளுடன் தேர்தல் உறவுகூட எங்களால் வைத்துக் கொள்ள முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெண்களை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இழிவாக பேசினார் என்று பாஜகவினர் சர்சையை கிளப்பினார். திருமாவளவன் மனுநீதி எனும் நூலில் உள்ளதைத் தான் கூறினார் என பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் அகில இந்திய அளவில் மக்கள் விரோதக் கருத்துக்களைக் கொண்ட இயக்கமாகவே நான் பாஜகவைப் பார்க்கிறேன் என திருமாவளவன் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த அவர் பாஜகவுடன் இணைந்து மக்கள் பனி ஆற்றலாமே என்ற கேள்விக்கு இவ்வாறான பதில் அளித்தார். மேலும் என்னால் பாஜகவுடன் இணைய முடியாது. குறிப்பாக சாதியவாத, மதவாத சக்திகளுடன் தேர்தல் உறவுகூட எங்களால் வைத்துக் கொள்ள முடியாது. அம்பேத்கர் மூர்க்கமாக மனு நூலை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்தார். அதை எதிர்த்துப் போராடக்கூடிய இயக்கத்திற்கு நான் தலைவராக இருக்கின்றேன். அப்படி இருக்கும்போது பாஜகவுடன் எங்களால் இணைய முடியாது. இதுவே எங்கள் கொள்கை முடிவாகும்.
பாஜக, மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றப் பார்க்கிறது. இந்த இரண்டு வருடங்களில் இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது என்று கூறி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து பாஜகவினர் நடத்தி வருகின்றனர். ஆனால் திமுகவில் இருக்கும் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள 90 விழுக்காடு பேர் இந்துக்கள் தான், கம்யூனிஸ்ட் கட்சிகளில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் தான். இவர்கள் இல்லாத எந்த இந்துக்களின் மனதை நாங்கள் புண்படுத்தி விட்டோம்? எங்கள் கட்சியில் இருக்கும் இந்துக்கள் மனதைப் புண்படுத்தி எங்களால் கட்சி நடத்த முடியுமா? பாஜகவினர் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகின்றனர். இது ஒரு கீழ்த்தரமான அரசியல் என திருமா விமர்சித்தார்.