தாலி கட்டும் நேரத்தில் கொஞ்சம் பொறுங்கள் என் காதலன் வருவான் என்று கூறி மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ருந்தனர். திருமணத்தின்போது மணமேடையில் மணமக்கள் இருந்தனர். அப்போது அவர்களின் குடும்ப முறைப்படி திருமணத்திற்கு சம்மதமா என மாப்பிள்ளை கேட்க, மணப்பெண் அதற்கு சம்மதம் இல்லை என்று கூறியதோடு தன் காதலன் வருவான் நான் அவனுடன் செல்வேன் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினார். பின்னர் அங்கிருந்து எழுந்து செல்ல அவர் முயன்ற போது பிரியதர்ஷினியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனை அடுத்து பிரியதர்ஷினியின் பெற்றோர் அவரை சாலையில் இறக்கிவிட்டு இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி விட்டதாகவும், அவர் தன் காதலனைத் தேடி சென்னைக்கு போய்விட்டதாகவும் சில தகவல்கள் பரவி வந்தன. ஆனால் பிரியதர்ஷினி தற்போது வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “நான் எங்கும் செல்லவில்லை, என் பெற்றோடு தான் இருக்கிறேன். மேலும் எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நல்லவர் இல்லை என்ற தகவல் எனக்கு கிடைத்ததால் இத்தகைய பொய்யை கூறி நான் திருமணத்தை நிறுத்தினேன்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் தன் பெற்றோருடன் இருக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இந்த சம்பவம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.