கேரளாவை போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்தில், “விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தை போன்ற காய்கறிகளை அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது. மேலும் வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. இடைத்தரகர்கள் சிலர் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி தீபாவளி நேரத்தில் விலையேற்றத்தை அதிகரிக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.