குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 24ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து, அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.இதுதொடர்பாக, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (24) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, செல்வகுமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து, காவல் துறையினர் தரப்பில், “குமரியில் மாயமான சிறுமிக்கும் கடலூரைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் காதலாக மாறி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அதேபோல் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த செல்வகுமார் முகநூல் மூலம் அவர்களுடன் இணைந்தார்.
இந்நிலையில், சிறுமி அடிக்கடி முகநூல், கைப்பேசி என இருந்ததால் வீட்டில் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால், விஜய்யிடம் தன்னை அழைத்து செல்லும்படி தனது முகநூல் தோழர் செல்வகுமாரிடம் சிறுமி கூறியுள்ளார்.இதுதொடர்பாக விஜய், செல்வகுமார், சிறுமி மூவரும் ஆலோசித்தனர். பின்னர், செல்வகுமார் சிறுமியை திருச்சிக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். திருச்சி பைபாஸ் ரோட்டில் ஏற்கனவே விஜய் காத்திருந்தார். அவரிடம் சிறுமியை ஒப்படைத்துவிட்டு செல்வகுமார் திரும்பினார்.
காவல் துறையினர் தேடியதால், செல்வகுமார் தலைமறைவாக இருந்தார் என்பது அவரிடம் நடந்த விசாரணையில் தெரியவந்தது. சிறுமி, விஜய் ஆகிய இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தனிப்படை காவல் துறையினர், சிறுமியை மீட்பதற்காக சென்னை புறப்பட்டு சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.