தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” சென்னையிலிருந்து வழக்கம் போலவே கோயம்பேடு, கேகே நகர், மாதவரம், தாம்பரம் மற்றும் பூவிருந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதே சமயத்தில் சென்ற வருடத்தை விட குறைவான பேருந்துகளை இந்த வருடம் இயக்கப்படுகின்றன. சென்னையில் மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் தற்போது வரை 27 ஆயிரம் பேர் பேருந்துகளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளனர். கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 18,544 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த வருடம் மிகவும் குறைவாக 14,757 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்து போக்குவரத்தை நவம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் இயங்கும். தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு அடுத்த மூன்று நாட்கள் பேருந்துகள் இயக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.