ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் வெல்ல முடியாத விரக்தியில் கோவையில் மேலும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.
கோவை சுந்தராபுரம் மச்சாம்பாளையம் ரௌண்ட்ரோடை சேர்ந்த ஜெய்சந்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பெற்றோர் இறந்து விட்ட நிலையில் உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது இதய அறுவை சிகிச்சைக்காக அதிக அளவு கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்த நிலையில் அவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வேலைக்குச் செல்லாமல் முழு நேரமும் ரம்மி விளையாடுவதில் கவனம் செலுத்தியதாக தெரிகிறது.
ஆனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அவரால் பணத்தை வெல்ல முடியவில்லை. இதனால் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் அவர் இருந்தார். பணத்தை இழந்ததால் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு முன்பு கோவை தீர நாயக்கன் பாளையத்தில் தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.