சிறையிலிருந்து பரோலில் வெளியே சென்ற 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் வீட்டிலேயே இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கொரோனாவின் தாக்கம் கேரள மாநிலத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதால் சிறையிலிருந்து பரோலில் வெளியில் சென்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறைக்கு வர வேண்டாமென்று கூறி கூடுதலாக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் சென்ற மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மத்திய சிறைகள் உட்பட மொத்தமாக 54 சிறைச்சாலைகள் கேரளாவில் இருக்கின்றது.
திருவனந்தபுரத்தில் இருந்த மத்திய சிறையில் பணியாளர்கள் உட்பட 480 பேர் ஆகஸ்ட் மாதத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனால் மனித உரிமை ஆணையம் கைதிகளுக்கு தனிமைப்படுத்தும் வசதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் சிறையில் ஏராளமான கைதிகள் இருப்பதால் அவர்களது எண்ணிக்கையை குறைப்பதற்காக ஏழு வருடங்களுக்கும் குறைவான சிறை தண்டனை பெற்று இருக்கும் குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் வெளியில் அனுப்பியது. கடத்தல் பாலியல் குற்றங்கள் தீவிரவாத செயல்கள் போன்ற பிரச்சினை ஈடுபட்டவர்களுக்கு பரோல் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.