தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தமிழகத்தில் குறைவான பாதிப்பே மிக வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக அளிக்கக்கூடிய வகையில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஒருகோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது வரை 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் உருவாகாமல் இருப்பதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். கொரோனா பரவுவதற்கு பண்டிகை காலம் காரணமாக இருக்கக் கூடாது என்பதால் மக்கள் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.