நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக வேலை தேடி பல ஊர்களுக்கும் சென்ற சொந்த ஊர் வாசிகள் ஊருக்கு திரும்புவதற்கு ஏதுவாக தமிழக அரசு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர், அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். அதே நேரத்தில் சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது.
அந்த வகையில் தற்போது அதற்கான ஒரு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1800 425 61 51 என்ற தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்ணில் நவம்பர் 11 முதல் பதினெட்டாம் தேதி வரை பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மேலும் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.