கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது
ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்பிமன் கில்லும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடினர்.
அதன் பிறகு 10வது ஓவரில் லின் 29 பந்துகள் 54 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆண்ட்ரே ரஸெலும், கில்லும் இணைந்தனர். இருவரும் அதிரடி காட்ட ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன் பிறகு அதிரடியாக அரைசதம் கடந்த கில் 45 பந்துகள் 76 ரன்கள் (6 பவுண்டரி 4 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். அதன் பிறகு தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸெல் இருவரும் இணைந்தனர். ரஸெல் வழக்கம் போல் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இறுதிவரை ரஸெல் அதிரடியாக விளையாடியதால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து இமாலய இலக்காக 232 ரன்கள் குவித்தது. ஆண்ட்ரே ரஸெல் 40 பந்துகள் 80 ரன்களுடனும் (8 சிக்ஸர் 6 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 15* (7) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை அணியில் ராகுல்சாஹர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் ரன் ஏதும் எடுக்காமலும், ரோஹித் சர்மா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த எவின் லீவிஸ் 15, சூர்யகுமார் யாதவ் 26, பொல்லார்ட் 20 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின் ஹர்திக் பாண்டியா வந்தவுடன் சிக்ஸர் மழை பொழிய ஆரம்பித்தார். பாண்டியா ஆக்ரோசமாக ஆடி 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். பாண்டியாவின் இந்த அதிரடியை பார்த்து கொல்கத்தா பதறிப்போனது.அதன் பின் ஹர்திக் பாண்டியா சதத்தை நெருங்கி வந்த நிலையில் 18வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்கள் (9 சிக்ஸர், 6 பவுண்டரி) எடுத்த நிலையில் கர்னி பந்து வீச்சில் ரஸெல் வசம் பிடிபட்டார்.
இதையடுத்து க்ருனால் பாண்டியாவும் 24 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழந்து 198 ரன்கள் குவித்தது. இதனால் கொல்கத்தா அணி 37 ரங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் சுனில் நரேன், கர்னி, ஆண்ட்ரே ரஸெல் ஆகியோர் 2 விக்கெட்டுகளும், பியூஸ் சாவுலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.