தலைவாசல் அருகே மூன்று மாத குழந்தையை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா உமையாள்புரம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின் மகள் தவமணி என்பவருக்கும், தலைவாசல் அருகே சார்பாய் புதூர் தேவேந்திரன் நகர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணிகண்டன் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு மேலாக தனது தாய் வீட்டில் தவமணி இருந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தாய் வீட்டிலிருந்து தவமணி கணவர் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெரியசாமிக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. அதில் அவரின் மகளும் பேத்தியும் இறந்துவிட்டதாக தவமணி கணவர் கூறியுள்ளார். உடனடியாக பெரியசாமி தனது உறவினர் தனசேகரன் என்பவருடன் மணிகண்டன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது வீட்டின் தாழ்ப்பாள் போட்டிருந்தது. அவர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மூன்று மாத கைக்குழந்தையுடன் தவமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை பெரியசாமி தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.