பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக ”வேல் யாத்திரை” நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி மற்றும் தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
அப்போது பாஜக சார்பில் வேல் யாத்திரை தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி மனு கொடுத்ததாகவும், 17ஆம் தேதி டிஜிபி அளித்த விளக்கத்தில் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆணையரிடம் தனித்தனி மனுவாக அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வரை மனு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், திருவள்ளூரில் கொடுத்த மனுவில் ஒவ்வொரு இடமாக கூட்டம் நடத்துவது போன்ற அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.
மேலும், அங்கிருந்து கிளம்பி வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என்ற பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு முன்பாக மார்ச் 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் எவ்விதமான போராட்டம், பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் சென்னை உய்ரநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதிப் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே தற்போது உள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு இருந்தாலும், கொரோனவை கட்டுப்படுத்த பல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருக்கின்றது. அதே போல, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அதிகப்படியாக ஒரு கூட்டம் நடத்துவதற்கு 100 பேர் மட்டும்தான் அனுமதிக்க முடியும் என்றும், நவம்பர் 16-ஆம் தேதி வரைஇது அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிக நபர்களை அனுமதிக்கலாமா வேண்டாமா ? என்பது குறித்து நவம்பர் 16 பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியா தவிர பிற நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது, மூன்றாவது அலை வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் கூடுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று டிஜிபி தரவில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தும் தமிழக அரசு அனுமதி வழங்காதது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.