காவல்துறையினர் அழைத்து சென்ற நகைக்கடை உரிமையாளர் பற்றிய எந்த தகவலும் வெளிவராததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் வல்லம் ஊரணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 4 பேர் காரணம் எதுவும் கூறாமல் தங்களை காவல்துறையினர் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ஆறுமுகத்தின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் தஞ்சாவூர் பைபாஸ் சாலைக்கு ஆறுமுகம் பயன்படுத்தும் மாத்திரைகளையும் அவரது கைலியும் எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினர் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு வந்த காவல் துறையினர் குடும்பத்தினரிடம் ஆறுமுகம் பற்றிய எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் சாத்தான்குளத்தில் நடந்தது போன்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என ஆறுமுகத்தின் மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் இன்று இரவுக்குள் தனது கணவர் வீட்டிற்கு வரவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
வணிகர் சங்கத்தினர் கூறுகையில் தொடர்ந்து நகை கடை உரிமையாளர்களை காவல்துறையினர் குறிவைத்து இதுபோன்று செய்வதாகவும், சங்க நிர்வாகிகளிடம் கூட தெரிவிக்காமல் விசாரிக்க அழைத்து செல்வதும், குடும்பத்தினரை மிரட்டி அவர்கள் வைத்திருக்கும் நகைகளை வாங்கிச் செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில் திருட்டு நகை தொடர்பாகவும் அதனை வாங்கியது பற்றி விசாரிக்கவும் ஆறுமுகத்தை அழைத்துச்சென்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.