பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளி நெருங்கும் நிலையில் ராஜஸ்தான் ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்கவும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத பட்டாசுகள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பட்டாசு தொழிலில் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் தமிழகத்தில் தீபாவளி சீசனை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றி கேள்வியே எழாது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பட்டாசு வெடிப்பதால் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை ராஜஸ்தான் ஒடிசா மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.