மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை அன்று அதிக அளவிலான பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
அதனால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி தீபாவளிக்கு பின்னர் பொதுமக்கள் நலன் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு கொரோனா நோயாளிகளை நேரடியாக பாதிக்கும். இதனை கருத்தில் கொண்டு இந்த வருடம் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக அளவிலான விளக்குகளை ஏற்றி இந்த வருடம் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடலாம்” என்று தெரிவித்துள்ளது.