ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ப்ளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை – டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது.
201 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு தொடக்கத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் வீரர்களான ப்ரித்வி ஷா, ரஹானே, தவான் ஆகியோர் மும்பையின் இரட்டை குழல் துப்பாக்கிளான போல்ட், பும்ராவிடம் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தனர். இதனால் டெல்லி அணி ரன் ஏதும் எடுக்காமலேயே 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களிலும், ரிஷப் பண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. ஆனால் அதன்பிறகு களத்திருந்த ஸ்டோய்னிஸ் – அக்சர் படேல் இணை மும்பை பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தது.
அதிலும் ராகுல் சாஹர் வீசிய 2 ஓவர்களில் 35 ரன்கள் குவிக்கப்பட்டது. அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் அரைசதம் கடந்தார். அவர் 46 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பும்ரா வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு பெவிலியனுக்கு திரும்பியதால் 20 ஓவர்களின் முடிவில் டெல்லி எட்டு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இறுதி போட்டிக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில், பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றுபெறும் அணி இரண்டாம் குவாலிஃபயர் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொள்ளும். அதில், வெற்றிபெறும் அணி இறுதி போட்டியில் மும்பையை எதிர்கொள்ளவுள்ளது.