காவலர் ஒருவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் திருடிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் தங்கதுரை என்பவரின் வீட்டில் பட்டப்பகலில் 15 சவரன் நகையை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இதையடுத்து அங்கிருந்த கைரேகை பதிவுகளை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அந்த கைரேகை திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேலின் கைரேகையோடு ஒத்துப் போனதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் காத்திருந்தன. 2017 ம் வருடம் காவல்துறை தேர்வில் தேர்வான கற்குவேல் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் அதிகமாக இரவு பணியை தான் கேட்டு வாங்குவார் என்று அவருடன் பணியாற்றிய மற்ற காவலர்கள் தெரிவித்துள்ளனர். இவர் இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளில் சென்று அதிகளவில் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கற்குவேல் காவல் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இவர் ஆடம்பரமான வாழ்க்கை மீது அதிக ஆசை கொண்டவர் என்பதால் அவருக்கு தேவையான பணத்துக்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து இவர் சொந்தமாக வீடு கட்டி, கார் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கற்குவேல் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்ததால் பணத்திற்காக திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறையினர், கற்குவேல் சிறுவயதிலிருந்தே பூட்டியிருக்கும் வீடுகளுக்குள் சென்று திருடி வருவார் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 15 சவரன் நகை, பைக் மற்றும் கார் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய 4 நண்பர்களையும் கைது செய்துள்ளனர். காவல் துறையில் ஒரு திருடன் சுற்றி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.