ஒரே நாளில் இரண்டு வாலிபர்கள் கண்மாயில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் இருளப்பன் என்பவரது மகன் சதீஷ்குமார்(22). இவர் சம்பவத்தன்று பக்கத்தில் உள்ள உள்ள கண்மாயில் அவருடைய அண்ணன் முனியசாமி மற்றும் பெரியசாமி ஆகியவர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சதீஷ்குமார் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று சிவகாசியை சேர்ந்த பெத்துராஜ் என்பவரின் மகன் விக்னேஷ்(20). இவர் ஊரிலிருந்து தனது பாட்டியின் சாவிற்கு விளாத்திகுளத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து இறுதிச்சடங்கு முடிந்து கண்மாயில் குளிக்கச் சென்ற விக்னேஷ் திடீரென நீரில் மூழ்கி இறந்துள்ளார். இது குறித்த தகவல் கிடைத்ததும் சூரங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு வாலிபர்கள் கண்மாயில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.