வாலிபர் ஒருவர் காதலில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் மகன் கோவிந்தன்(25). இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு சேலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தன் பூச்சி மருந்தை வாங்கி குடித்து விட்டு மயக்கத்துடன் கிடந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவருடைய தந்தைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிபாளையம் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலில், கோவிந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவிநாசியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் வேலை செய்த திருச்சியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் கோவிந்தனின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த கோவிந்தன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.