கடலூர் மாவட்டத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மகளை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் செம்மண்டலம் புருசோத்தமன் நகரில் நாகராஜ் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 16 வயதுடைய செந்தமிழ் என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த அவரின் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். ஆனால் செந்தமிழ் மீண்டும் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போன் பார்த்து வந்ததால், தாய் மிகக் கடுமையாக அவரை கண்டித்து விட்டு ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அதன் பிறகு மாலையில் வீட்டுக்கு திரும்பிய லட்சுமி, வீட்டில் தனது மகள் செந்தமிழ் வாந்தி மயக்கத்துடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு அவரிடம் தாய் லட்சுமி விசாரித்தபோது, தான் விஷம் குடித்து விட்டதாக செந்தமிழ் கூறியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அனைவரும் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக செந்தமிழ் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அனைவரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செந்தமிழ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி இலட்சுமி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.