அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் காரணமாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவரின் வெற்றிக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஷிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை தமது அடுத்த துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.