களம்பூர் அருகே பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்துள்ள களம்பூர் அருகே வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற நபர்கள் அதனை கண்டவுடன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரணி போலீஸார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறந்து கிடந்த பெண் யார் என்றும் எந்த ஊரை சேர்ந்தவர் எங்கிருந்து வந்தார் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
அவர் ஆரஞ்சு மற்றும் சந்தன நிற சேலையும், வெள்ளை நிறத்தில் ரவிக்கையும், நீல நிற பாவாடையும் அணிந்துள்ளார். கையில் கவரிங் வளையல் போட்டுள்ளார். அந்தப் பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பிறகு போலீசார் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.