அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றியை துளசேந்திரபுரம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்
உலகம் முழுவதிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிபர் தேர்தல் கடந்த 2ஆம் தேதி நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதிலும் அடுத்து அமெரிக்க அதிபர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் மக்கள் காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ஜோ பைடன் தான் முன்னிலையில் இருந்தார். இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு சென்றார்.
இந்நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கமலா ஹாரிஷின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் மக்கள் வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கமலா ஹாரிஸ் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து குலதெய்வ வழிபாட்டினை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினர். தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலமிட்டு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.