மனுதாரர் கேட்ட கேள்விக்கு பொதுத் தகவல் அலுவலர் திமிராக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டத்தில் இருக்கும் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஊராட்சி பயன்பாட்டிலுள்ள மின்மோட்டார், கை அடி பம்பு எண்ணிக்கையும் அதன் பராமரிப்பு செலவுகள் பற்றிய விவரங்களும் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தகவல் கேட்டுள்ளார். சந்திரனின் கேள்விக்கு ஊராட்சி அலுவலகத்தின் அலுவலர் பதில்களை வழங்கியுள்ளார். அதில் ஒரு பதிலில் தங்களால் கோரப்பட்ட கேள்வி எண் 1 முதல் 17 வரையிலான இனங்களுக்கு www.accounting.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தங்களுக்கு இணையதள அறிவு இல்லையாயின் இணையதள அறிவு பெற்ற ஒருவர் துணையுடன் மேற்படி இணையதளம் சென்று தகவல்கள் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது என பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விக்கான பதில் இணையதளத்தில் உள்ளது என்று கூறி இருந்தால் போதுமானதாக இருக்கும் சூழலில் மனுதாரரின் அறிவைத் தொடர்பு படுத்தி பதில் கூறியதற்கான அவசியம் என்ன என்று சந்திரன் அதிருப்தி அடைந்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர் அளித்த இந்த திமிரான பதிலுக்கு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.