நபர் ஒருவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த போது லாரி மோதியதால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த விருதம்பட்டில் வசிப்பவர் பழனிவேலு (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் காட்பாடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிவேலு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் ஆட்டோவில் கொணவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பணம் வாங்குவதற்கு சென்றுள்ளனர். இதையடுத்து மேல்மொணவூர் பக்கம் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை ஆட்டோவில் ஏற்றி கொண்டு 3 பேரும் கொணவட்டதிற்கு வந்து கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை நிறுத்தி இறங்கிய பழனிவேலு திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி திடீரென அவர் மீது மோதியதால் படுகாயம் அடைந்த பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் சுப்பிரமணி மற்றும் கார்த்திக் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இரண்டு பேரும் பழனிவேலுவின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.