நவம்பர் 8 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பிரதமர் நரேந்திரமோடி அதிரடி காட்டிய தினம் இன்று.
இந்த நாளையும் பிரதமர் மோதி அறிவிப்பையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமாட்டார்கள் நவம்பரில் 8 பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 2016 ஆம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி முன்பு திடீரென தோன்றிய பிரதமர் மோதி நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கபட்ட இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த அறிவிப்பு சில மணி நேரங்களில் பட்டிதொட்டியெங்கும் பரவியது. கிராம மக்கள் முதல் நகர வாசிகள் என 100 ரூபாய் நோட்டுகள் எந்த ATM-யில் உள்ளது என தெருத்தெருவாக தேடி அழைத்தனர்.
பல இல்லத்தரசிகள் குருவிபோல சேர்த்து வைத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அலைமோதினர். அன்றாட செலவுக்கு கூட ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் பணம் வங்கி வாசலில் தவம் கிடந்தன. இப்படி பல்வேறு இன்னல்களுக்கு ஆளானது வசதி படைத்தவர்கள் அல்ல மாதச் சம்பளம், தினக்கூலி வாங்கும் சாமானிய மக்கள் தான். வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் அதனை அத்தியாவசிய தேவைக்கு பயன் படுத்த முடியவில்லையே என பலர் புலம்பினாலும். பிரதமரின் அதிரடி நடவடிக்கையை கண்டு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த அறிவிப்பு முக்கிய செய்தியாக இடம் பெற்றது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் மீண்டும் வகைகளுக்கே திரும்பி வந்து விட்டதாகவும் இந்த நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகரிப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. நவம்பர் 8-யை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாகக் கடைப் பிடித்தாலும் பாஜகவினர் கருப்பு பண ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். எவ்வாறாயினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஆகவே அனைவரின் கண்முன்னே வந்து செல்கிறது.