மகளின் வரதட்சணைக்காக பத்து வருடங்களுக்கு பிறகு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்தபோது சந்தேகிக்கும் வகையில் ஒரு கார் அந்த பகுதியில் சுற்றி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் வாகன எண்ணை வைத்து விசாரித்ததில் உரிமையாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அதில் தான் புரசைவாக்கத்தில் சேர்ந்த நபரிடம் காரை விற்று விட்டதாக தெரிவிக்க சென்னை வந்து அந்த முகவரியில் போலீசார் பார்த்தபோது அங்கு யாரும் இல்லை.
இருப்பினும் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் செங்குன்றம் அடுத்த காரனோடை பகுதிக்கு போலீசார் சென்றனர். அவர்கள் கூறிய முகவரி ஒரு அடுக்குமாடி பங்களாவை காட்டியுள்ளது. ஏமாற்றத்துடனேயே விசாரணையை தொடங்கிய போலீசார் பங்களாவின் உரிமையாளரான ஜான்சன் என்பவரது மகனிடம் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் குறித்து விசாரித்தனர் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னரே காரை விற்று விட்டதாக கூற சந்தேகம் அடைந்த போலீசார் இளைஞர் மூலம் அவரது தந்தை ஜான்சனை வரவழைத்து விசாரணை நடத்தினர். தங்களது பாணியில் அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி பயத்தில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார் ஜான்சன்.
பத்து வருடங்களுக்கு முன்தான் கொள்ளையடித்து சிறிய சென்றதாகவும் பின்னர் திரும்பி ரியல் எஸ்டேட் தொழில் செய்து நன்கு பணம் சம்பாதிப்பதாகவும் கூறினார். ஊரடங்கு சமயத்தில் தொழில் முடங்கிப் பணம் இன்றி தவித்து வந்த நேரத்தில் தனது மகளுக்கு வரதட்சணை வழங்குவதாக ஒப்புக்கொண்ட நகைகளை கேட்டு மகள் வீட்டார் நச்சரித்தாள் வேறு வழியின்றி பழைய தொழிலை கையில் எடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதற்காக ஆன்லைனில் கொள்ளைக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி சம்பவத்தை அரங்கேற்றியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க அதனை பதிவு செய்த போலீசார் ஜான்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.