தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா மேற்கு மயிலோடை கிராமத்தை பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சி கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைப்போலவே கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சந்தியாகு என்ற சிறுவன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் சுரேன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெய சேகர், சோழிங்கநல்லூர் அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பாபு, விருதுநகர் வெம்பக்கோட்டை தாலுகாவை சேர்ந்த சரவணன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அந்தச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.