ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் தன மகன் வீட்டை விட்டு வெளியேற்றியதால் சாலையோரத்தில் பிச்சைக்காரர் போல வாழ்ந்து வருகிறார்.
கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தாமணி டவுன் காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் மதுசூதன் ராவ். போலீஸ் பணியில் பரபரப்பாக பணியாற்றிய அவர் கடந்த 2011ம் வருடம் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். திருமணமான இவருக்கு மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டதால் மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். பணி ஓய்வுக்கு பின்னர் மதுசூதன்ராவ் மது போதைக்கு அடிமையாகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவி உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். எனவே மனைவி இல்லாத துக்கத்தில் அவர் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்ததால் அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால் தந்தை மற்றும் மகனுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மதுசூதன் ராவை, அவரது மகன் வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டுள்ளார்.
இதனால் கவலையடைந்த மதுசூதன் ராவ் வீட்டுக்கு செல்லாமல், சாலையோரத்தில் தங்கி வந்துள்ளார். இதையடுத்து அவர் பழைய பொருட்களை பொறுக்கி அதை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளர். மேலும் அவரது பெயரில் லட்சக்கணக்கில் பணம் வங்கியில் இருந்தாலும் மகன் வீட்டில் இருந்து வெளியேற்றியதால் அவர் பிச்சைக்காரர் போல வாழ்ந்து வந்துள்ளார். கம்பீரமாக காவல் சீருடையில் பரபரப்பாக பணியாற்றிய மதுசூதன்ராவ் இன்று குப்பையிலுள்ள பொருட்களை சேகரிக்கும் சாக்கு மூட்டையுடன் கிழிந்த சட்டை அணிந்து தாடியுடன் அலங்கோலமாக இருப்பதை பற்றி சிக்பள்ளாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன்குமாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அவர், மதுசூதன்ராவுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க சிந்தாமணி டவுன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து மதுசூதன் ராவை சந்தித்து தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மதுசூதன், “எனக்கு யாருடைய உதவியோ மற்றும் சொந்தம் என்று யாரும் வேண்டாம். எனக்கு இந்த தெரு வாழ்க்கை மட்டும் போதும். இறந்த வாழ்க்கையே எனக்கு நிம்மதியை தருகிறது” என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.