சென்னையில் தடையை மீறி வேல் யாத்திரை மேற்கொண்ட பாஜகவினர் மீது 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. முதற்கட்டமாக கடந்த வெள்ளியன்று திருத்தணியில் யாத்திரையில் பங்கேற்று ஏராளமானோர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது கட்டமாக நேற்று திருவாற்றியூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் முருகன், இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, கரூர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தனர். கொரோனா தொற்று பரவலை அலட்சியம் செய்துவிட்டு ஒரே இடத்தில் கூடி ஊர்வலம் மேற்கொண்டது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.