இலங்கை குண்டு வெடிப்பையடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 21.04.2019)-யில் நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 42 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 253 பேர் உயிரிழந்தது உலகையே அதிர வைத்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியதாக IS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் இலங்கை முழுவதும் பல அதிரடி மாற்றங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தினால் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவாலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேவாலயங்களில் மட்டும் பொது பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். பாதுகாப்பு காரணங்களுக்காக, தேவாலயங்களுக்குள் பைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது. அத்துடன், அறிமுகமில்லாத புதிய நபர்கள் தேவாலயத்துக்குள் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.