கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் 6 மணி நேரத்தில் கையும் களவுமாக பிடித்தனர்.
கோவையில் பீளமேடு அருகே உள்ள லட்சுமி கார்டன் என்ற பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க வேலு என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவரின் வீட்டின் ஜன்னல் திரை சீலைகள் கிழிந்து விட்டன. அதனால் அதனை மாற்றுவதற்கு முடிவு செய்தார். அதற்காக பெரியநாயக்கன்பாளையம் அருகே இருக்கின்ற ஜோதி புறத்தில் சேர்ந்த வீட்டு உள் அலங்கார வடிவமைப்பாளர் முகமது நிஜாஸ் என்பவரை அழைத்துள்ளார். அவர் கடந்த ஆறாம் தேதி வேலுவின் வீட்டிற்கு வந்து ஜன்னல்களில் புதிய திரைச்சீலைகளை பொருத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது வீட்டின் ஜன்னலுக்கு அருகே ஒரு பெட்டியில் 41 பவுன் நகைகள் இருப்பதை பார்த்துள்ளார். அவனை கண்டவுடன் அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு, அந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு திரை சீலைகள் பொருத்தும் பணியை முழுமையாக முடித்து விட்டு, வேலுவிடம் தனது கூலியை வாங்கிக்கொண்டு, வீட்டில் மறைத்து வைத்த நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து வேலு தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் அருகே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஷோபனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், வேலுவின் வீட்டில் திரை சீலை அமைப்பதற்காக வந்திருந்த முகமது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த போலீஷை உயரதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள்.