கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தாலும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சம் முழுவதும் நீக்குவதற்குள் பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே பள்ளி கல்லூரி திறப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் தமிழக அரசு இது குறித்து வரும் 12-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தாலும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் தொற்றுக் ஆளாவதை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.