நியாபக மறதி இருப்பவர்கள், அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
முக்கியமாக அதிகம் யோசித்து கொண்டே இருப்பவர்களுக்கு ஞாபக மறதி அதிகரிக்கும். எனவே மறதியை தவிர்க்கவும், நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 3 எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று இதில் பார்க்கலாம்.
ரத்த அழுத்தம் :
ரத்த அழுத்தம், மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தியானம், யோகா பழகுங்கள் :
எட்டு வாரங்களுக்கு, ஒரு நாளைக்கு 15-30 நிமிடங்கள் தியானம் செய்பவர்களுக்கு மூளையில் உள்ள நரம்புகளின் இடையே அதிக இணைப்புகள் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நினைவாற்றலுக்குப் பொறுப்பான மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸ் சுருங்குவதும் வெகுவாக குறைகிறது. இதனால் டிமென்ஷியா போன்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் கண்களால் பார்க்கும் காட்சி சார்ந்த நினைவுதிறன் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தினசரி யோகா செய்பவர்களால் இடங்களை நன்றாக நினைவுப்படுத்தி கூற முடியும்.
எழுத பழகுங்கள் :
இன்றைய காலகட்டத்தில் கணினி மற்றும் மொபைல் போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் மக்களிடையே எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது.
ஆனால் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் அதிக நினைவாற்றல் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே நல்ல நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள கணினி மற்றும் மொபைல் போனை பயன்படுத்தாமல் பென்சில் அல்லது பேனா மூலம் மக்கள் எழுதி பழக வேண்டும்.