பணத்தைக் கேட்டு அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்படுவதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார். அதில், அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க. தலைமை கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து வைத்திருந்தது என்றும், அந்தப் பணத்தைக் கேட்டு துரைக்கண்ணுவின் குடும்பம் மிரட்டப்பட்டது என்றும், அதற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகுதான் மரண அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு இதுவரை முதலமைச்சரோ, முந்திரிக் கொட்டை அமைச்சரோ பதில் சொல்லவில்லை. மவுனமாக இருப்பது ஏன்?
அரசாங்கச் சொத்தைக் கொள்ளையடித்து, மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி, கஜானாவைக் காலி செய்து அந்தப் பணங்களை எல்லாம் பல்வேறு இடங்களில் எடப்பாடி கூட்டம் பதுக்கி வைத்துள்ளது என்பது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது. துரைக்கண்ணுவுக்கு நெருக்கமான சிலர் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? அமைச்சர் துரைக்கண்ணு வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பல நூறு கோடி பணம், இத்தகைய பணம்தான் என்று சொல்லப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்காக இதனை பல்வேறு இடங்களில் பிரித்து பதுக்கி வைத்துள்ளார்கள்.
அப்படியானால் இந்த நாட்டில் மத்திய அரசு என்ன செய்கிறது? வருமானவரித்துறை என்ன செய்கிறது? வருவாய் புலனாய்வுத் துறை என்ன செய்கிறது? உள்துறை என்ன செய்கிறது? அல்லது இந்தப் பணப் பதுக்கலுக்கும் மத்திய அரசுக்கும் மறைமுகத் தொடர்பு இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் எத்தனை கோடி பணம் எடுத்து வந்தாலும் தி.மு.க.வை வெல்ல முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் மனங்களை வென்ற இயக்கம்!
பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்!
மொத்தத்தில் ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு மாறிவிட்டது. கோட்டையை சில அமைச்சர்கள் கொள்ளையர் கூடமாகவும், சில அமைச்சர்கள் மூடர் கூடமாகவும் மாற்றிவிட்டார்கள். இந்தக் கோட்டையை மீட்கும் ஜனநாயகப் போர் தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல். தமிழ்நாட்டின் மானம் காக்க அனைவரும் மருதுபாண்டியர்களாக எழுங்கள். கண்ணகியாக எழுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!” என உரையை முடித்தார்.