Categories
அரசியல் மாநில செய்திகள்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்” – முக.ஸ்டாலின்

அமைச்சர் செல்லூர் ராஜு நமக்கெல்லாம் கொரோனா வராது என்று முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில்  ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வந்ததா? இல்லை! தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா? இல்லை! ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் விடவில்லை.

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்” என்றானாம். அதைப் போல மதுரைக்கு சிறுசிறு நன்மைகளைக் கூடச் செய்து கொடுக்க முடியாத இவர்கள், மதுரையைத் தலைநகர் ஆக்குவேன் என்று வாய்ப்பந்தல் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

மதுரை வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போலவும், மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போலவும், இத்தாலியின் ரோம் நகரைப் போலவும் மாற்றுவேன் என்றும் செல்லூர் ராஜு சொன்னார்.

என்னைப் பொறுத்தவரையில் செல்லூர் ராஜுவுக்கு நான் சொல்வது, சிட்னியாக, ரோம் நகராக மாற்றவேண்டாம். இப்போது இருக்கும் மதுரையை மேலும் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் என்னுடைய மிகமிகத் தாழ்மையான வேண்டுகோள்.

செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள். இதை நான் சொல்லவில்லை. இங்குள்ள அ.தி.மு.க. தொண்டர்களிடம் விசாரித்தாலே சொல்லிவிடுவார்கள்.

இவர்கள் இரண்டு பேரும் தங்கள் துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால் என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவைப் பேட்டிகள், இன்றைக்குப் புதிதாக என்ன தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் வரிசையாக பட்டியல் போட்டுச் சொல்வார்கள்.

வைகை ஆற்று நீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் – நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கதை விட்டது வரை, முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜு.

குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்று சொன்னாரே, அதை கல்வெட்டாக செதுக்கி, அவரை அதற்குப் பக்கத்தில் உட்கார வைக்கலாம்.

இவர் ஒரு பேட்டி கொடுத்துவிட்டால் போதும், அடுத்த அரைமணி நேரத்தில் மைக் முன்னால் வந்துவிடுவார் உதயகுமார். இரண்டு பேருக்கும் எதில் போட்டி என்றால், பேட்டி கொடுப்பதில் போட்டி.

மதுரையை ரோம் ஆக்குவேன் என்று செல்லூர் ராஜு சொன்னதும், ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார், ‘மதுரையின் வளர்ச்சியா? அமைச்சர் பதவியா என்றால், நான் மதுரையின் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்துவேன்’ என்று சொல்லி இருக்கிறார். இந்த உலகமகா நடிப்பை இவர்கள் இருவரிடம்தான் பார்க்க முடியும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |