Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வண்டவாளமும் தெரிஞ்சுடுச்சு… மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது… அரசை கடுமையாக சாடிய ஸ்டாலின் …!!

அமைச்சர் உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது என முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ இணைப்பு வழங்குவதற்காக மத்திய அரசு ‘பாரத் நெட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை ‘ஆப்டிக்கல் பைபர் கேபிள்’ என்ற கண்ணாடி இழை கம்பி வழியாக இணைக்க வேண்டும். இதற்காக சுமார் 2,000 மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக, டெண்டர் நிபந்தனைகளில் அமைச்சர் உதயகுமார் மாற்றம் செய்துவிட்டதாக செய்திகள் பரவின. நான் விரிவாக அறிக்கை வெளியிட்டேன். ஆனால் உதயகுமார் மறுத்தார். நான் சொல்வது தவறு என்றார். அமைச்சருக்கு விளக்கமான பதிலை அன்றைய தினம் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அவர்களும் அறிக்கை மூலமாகக் கொடுத்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் இது பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். வழக்கம் போல லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். டெண்டரே விடவில்லை, விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடந்திருக்க முடியும் என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்னார்கள்.

ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய அரசு சொல்லி விட்டது. தி.மு.க. ஏதோ பொய் சொன்னதாகவும், தி.மு.க.வுக்குப் பின்னடைவு என்றும் உதயகுமார் உத்தமரைப் போல பேட்டிகள் கொடுத்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த டெண்டரையே நிறுத்தி வைக்க மத்திய வர்த்தக அமைச்சகம் சொல்லி விட்டது. உதயகுமாரின் ஊழல் முகத்தை மத்திய அரசே கிழித்துத் தொங்கவிட்டு விட்டது. ஒப்பந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததுதான் இந்த ஒப்பந்த ரத்துக்குக் காரணம் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது

தென்னக மக்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட தியாகி உதயகுமார் இதற்கு என்ன சொல்வார்? என்ன விதிமுறைகளை, யாருக்குச் சாதகமாக மாற்றினார் என்பது அரசு அதிகாரிகளுக்கே தெரியும்.இந்தக் குற்றச்செயலுக்கு உடன்பட மாட்டேன் என்று சொன்ன தொழில் நுட்பத் துறைச் செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவர் இந்த வேலையே வேண்டாம் என்று போய்விட்டார். டான்பிநெட் நிர்வாக இயக்குநரும் மாற்றப்பட்டார்.

இப்படி தங்களது ஊழல் முறைகேட்டுக்கு உடன்படாத அதிகாரிகளைப் பழிவாங்கிக் கொண்டு இருக்கிறது இந்த அ.தி.மு.க. அரசு. நல்ல அதிகாரிகள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள். டம்மி பதவிகளை வாங்கிக் கொண்டு போய் அங்கு அமைதியாக உட்கார்ந்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் நிர்வாகத் துறையானது செயல்படாமல் ஆகிவிட்டது. பணம் கொழிக்கும் டெண்டர்களுக்கு மும்முரமாக வேலைகள் நடக்கின்றன. கமிஷன் கிடைக்கும் திட்டங்களுக்கு மட்டுமே பில்கள் பாஸ் பண்ணப்படுகின்றன. பணிமாறுதல்கள் அனைத்தும் லஞ்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இன்னும் சொன்னால் லஞ்சம் வாங்குவதற்காகவே பணிமாறுதல்கள் செய்யப்படுகின்றன.

உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது. எடப்பாடி அரசாங்கத்தின் ஊழல் நாற்றம், இன்றைய தினம் மரணக் குழி வரைக்கும் போய்விட்டது! சமீபத்தில் மரணம் அடைந்தார் மாண்புமிகு அமைச்சர் துரைக்கண்ணு. ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே, துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. துரைக்கண்ணு எந்த தேதியில் மரணம் அடைந்தார் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று நானே எனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தேன். ஆனால் அ.தி.மு.க.வினர், துரைக்கண்ணுவின் உடலை வைத்து ஊழல் நாடகம் ஆடி இருக்கிறார்கள் என ஸ்டாலின் கடுமையாக பாய்ந்துள்ளார்.

Categories

Tech |