சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காதல் மன்னன் காசி மீது புதிதாக புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் காசி. பல பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. காசி பல பெண்களோடு நெருங்கி பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், காசி தன்னை காதலிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றியதோடு பணத்தையும் பறித்து வந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து காசி மீது மற்றுமொரு பாலியல் வழக்கு பதியப்பட்டது. இது குறித்த காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சென்னையை சேர்ந்த பெண்ணிடம் காசி இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி, சென்னைக்கு நேரில் சென்று அந்த பெண்ணை பார்த்துள்ளார். பின்னர் அந்த பெண்ணையும் கன்னியாகுமரிக்கு வரவழைத்து காரில் பல இடங்களுக்கு கூட்டி சென்று காண்பித்துள்ளார்.
இந்நிலையில் காரை சாலையோரம் நிறுத்தி ஆசை வார்த்தைகளை கூறிய காசி, அந்த பெண்ண காரில் வைத்தே உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது தனது கையில் கட்டியிருந்த வாட்சில் இருந்த ரகசிய கேமரா மூலம் படம் எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த விடியோவை வைத்து அந்த பெண்ணை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காசி அந்த பெண்ணிடம் எவ்வளவு பணம் பறித்தார்? அவருக்கு உடந்தையாக யரும் உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.