புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்த 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஒரு வீட்டில் சிறுமிகள் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குழந்தைகள் நல மையத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கீழ்சாத்தமங்கலம் ஏரிக்கரையோரம் இருந்த குடிசையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது முதல் 13 வயது வரையில் உள்ள 5 சிறுமிகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த சிறுமிகள் 5 பேரையும் பத்திரமாக மீட்டு தனியார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியப்பன் என்பவருக்கு சொந்தமான வாத்து பண்ணையில் அந்த சிறுமிகள், வாத்து மேய்த்து வந்ததும், கன்னியப்பன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 7 பேர் சேர்ந்து சிறுமிகளை மிரட்டி தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தற்போது கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்குமார், பசுபதி, சிவா,அய்யனார், மூர்த்தி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவின் கீழ் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வாத்து மேய்க்க வந்த இடத்தில் 5 சிறுமிகளை, 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.