செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அருள் கேட்க வந்த பெண் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தலூர் கிராமத்தில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முருகம்மாள் என்பவர் அருள்வாக்கு கூறி வந்தார். இந்நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த தங்கம் என்ற பெண்ணை அருள்வாக்கு கேட்பதற்காக கணவரின் உதவியால் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை 15 நாட்களுக்கு கோவிலில் தங்கி இருக்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறியுள்ளார். இதனால் உதயகுமார் தனது அம்மா மற்றும் மாமியாருடன் கோவில் அருகே தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பார்த்த போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஓடியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற போது உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த பகுதியில் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தது இது மூன்றாவது உயிரிழப்பு என கூறப்படுவதால் இது பெரும் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.