பேராசிரியர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி திறக்காததால் வருமானத்திற்காக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள தேவதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் வீரநாககவுடா. இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் கடந்த 9 வருடங்களாக கவுரவ பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வீரநாககவுடா வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குடும்பம் நடத்துவதற்காக இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார்.
20-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து, அதில் வரும் சம்பளத்தை வைத்து வீரநாககவுடா குடும்பத்தை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதமாக நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தேன். எனவே குடும்பம் நடத்த வேறு வழி இல்லாமல் தற்போது ஆடுகளை மேய்த்து வருகிறேன். இதனால் எனக்கு தினமும் 200ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. மேலும் என்னை போன்று வருமானம் இல்லாமல் நிறைய கவுரவ பேராசிரியர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே எங்கள் கஷ்டத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.