ட்ரம்பின் கேலி சித்திரத்தை டைம் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளதாக கூறி அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் பரபர வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், டிரம்ப் கேலி சித்திரமானது டைம் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த கேலி சித்திரத்தில் இருள் நிறைந்த அறையில் இருந்து டிரம்ப் வெளியேறுவது போன்ற படத்தில் நேரம் வந்து விட்டதை குறிக்கும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வைரலாக இந்த புகைப்படத்தை ஆய்வு செய்த போது, டைம் பத்திரிக்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் அட்டைப்படம் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
டைம் பத்திரிகை வலைதளத்தில் அச்சிடப்பட்ட அட்டைப்படங்கள் பதிவேற்றம் செய்துள்ளதில், சர்ச்சையான டிரம்ப் கேலி சித்திரம் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரல் படத்தில் தேதி தவறாக இடம்பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது, வைரலாகும் ட்ரம்ப் கேலி சித்திரத்தை டைம் பத்திரிக்கை வெளியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து போலி செய்திகளை பரப்பாதீர்கள் என்று டைம் பத்திரிக்கை நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.